×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ புகைப்போர் செய்யும் கேடு →  கவிதை → அவளின் பார்வையில் அவன் ஓர் ஆண் →  கவிதை → சித்திரக் கவி → எழுதவே நினைக்கிறேன் → சிவலிங்கா - திரைப்படம் → குழந்தை பிறந்த நேரம்

ஆசிரியரிடமிருந்து‍ …!

பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்வதற்கு மொழி ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. நிறம், பழக்க வழக்கம் இவற்றைக் காட்டிலும் மொழி தான் ஓர் இனமாகக் கூடி வாழ வழி செய்கிறது. ஒரு மொழியை அழித்தால் அந்த இனம் எளிதாக அழிந்துவிடும்.

மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் பண்பாடு, வரலாறு, பழக்கவழக்கம், அரசியல், கலை, ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை கொண்டு உள்ளது. ஓர் இனத்தின் மீது மற்றொரு மொழியின் திணிப்பு என்பது ஓர் இனத்தின் வரலாறு, பழக்கவழக்கம், அரசியல், கலை, ஒழுக்க நெறிகள், பண்பாடு ஆகியவற்றின் மீது எடுக்கப்படும் படை எடுப்பே ஆகும். மேலும் அவ்வினத்தினை அழிக்க முற்படும் செயல்களகாகத் தான் இவை அமைகின்றன. இவ்வாறான செயல்களை தான் இந்தி பேசாத மக்கள் மீது இந்திய மத்திய அரசு நேரிடையாகவும் மறைமுகமாகவும் செயல் படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று தான் நெடுஞ்சாலையில் மைல்கற்களை இந்தியில் எழுதுவதாகும்.

மொழி மனிதன் தகவல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஒரு ஊடகம் ஆகும். எனவே சொல்பவர்களுக்கும் கேட்பவர்களும் அந்த மொழியினை அறிந்து இருந்தால் மட்டுமே பரிமாற்றம் நிகழும். இல்லாவிட்டால் வெறும் விதவிதமான ஒலிகளாய் மட்டுமே இருக்கும். தூர்தர்ஷ்ன் வழங்கும் இந்தி நிகழ்ச்சி, இந்திய அரசு வெளியிடும் இந்தி விளம்பரங்கள் போலவே கேட்பவர்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருக்கும். அரசுக்குத் தகவல் பரிமாற்றம் நோக்கம் அல்ல இந்தி என்ற மொழியினை திணிப்பது தான் நோக்கம் என்று எளிதாக நாம் இவற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

வேற்று மொழி பேசுபவர்களுக்கு மைல் கற்கள் புரிபட வேண்டும் என்றால் அஞ்சல் குறியிட்டு எண்ணுடன் தூரம் எவ்வளவு என்று குறிப்பு இடுவது தான் சிறந்த செயலாக இருக்கும். இந்தி பேசுபவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கும் இது புரியும். இந்தி பேசாதவர்கள் இந்தி பேசும் மாநிலத்திற்குச் செல்லும் போது அவர்களுக்கும் இது புரியும். நோக்கம் தகவல் பரிமாற்றமாக இருந்தால் நடைமுறைப்படுத்த வேண்டியது இது அன்றி வேறு எதுவுமாக இருக்காது. ஆனால் அரசின் நோக்கமோ வேறாக அல்லவா இருக்கிறது. இது இந்தி பேசாத மக்களின் மொழியினை பண்பாட்டினை அழிப்பதில் தான் சென்றடையும். அவ்வாறு அவர்களை அழித்து ஓர் இனம் ஒரு மொழி ஒரு நாடு என்ற கொள்கை உடைய நாட்டினை உருவாக்குவது இவர்களின் செயல்பாடுகளாக இருக்கிறது. இது களைய பட வேண்டிய முயற்சி ஆகும். அதுவும் உடனடியாக செய்ய வேண்டிய செயலாகும்.

பெரும்பான்மை என்ற ஆயுதம் கொண்டு சிறும்பான்மையினை அழித்தல் சொந்த அழிவுக்குத் தான் வழி செய்யும். இந்த அரசின் செயல்பாடுகள் பசுவைக் காக்கிறோம் என்ற முகமூடி, எல்லைகளை காக்கிறோம் என்ற முகமூடி, கறுப்புப் பணத்தினை ஒழிக்கிறோம் என்ற முகமூடி, பண மசோதாக்கள் என்ற முகமூடி அணிந்து மற்றவர்களை அவர்களின் பண்பாடுகள் மற்றும் ஒழுக்க நெறிகளை அழிக்கும் செயல்கள் தான் நடந்து வருகின்றன.

நிற வெறி, இன வெறி, மொழி வெறி இவற்றைக் கொண்டு செயல்படும் இவர்களின் முகமூடிகளை கிழிந்து இவற்றை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என உணர வைக்கும் நேரம் இப்பொழுது என்பதனை நாம் உணர்ந்து செயல்படுவோம்.

மைல் கற்கள், நீட் தேர்வு, ஆதார் இவை போன்ற எண்ணற்ற செயல்களை ஆதரிக்காமல் அவற்றைத் தடுப்பது தான் அனைத்து மொழிகளுக்கும் அனைத்துப் பண்பாடுகளும் நாம் செய்யும் சேவையாகும். இது ஒட்டு மொத்த மனித இனத்தினை காப்பதற்கான நமது சிறிய மற்றும் சீரிய முயற்சியாகும்.

நோக்கமும் சிறந்ததாக இருக்க வேண்டும். நோக்கத்தினை அடைய நாம் போகும் பாதையும் சிறந்ததாக இருக்க வேண்டும். நோக்கமும் எவ்வித உள்நோக்கம் இல்லாமல் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

நம் நாடு மக்களாட்சி நாடு என்பதனை நம் மனதில் நிறுத்தி அதனை ஆட்சியாளர்களுக்கும் எடுத்துரைப்போம். மக்களாட்சிக்கு மனு தர்மமும் தேவையில்லை. சாணக்கிய நெறிகளோ அல்லது தந்திரங்களோ தேவையில்லை. அரசும் அதன் திட்டங்களும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க செயல்படுவோம்.

மேலும் இந்தியாவில் பேசப்படுகிற அனைத்து மொழிகளையும் தேசிய மொழி ஆக்கி வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மனிதனாக வாழ்வோம்.

- அழகன் ரா திருப்பதி