×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ அணுமின் நிலையம் பார்த்தோம்! →  கவிதைகள் → மிறைக் கவி (சித்திர கவி) → வேலையில்லா பட்டதாரி - 2 - திரைப்படம் → இயற்கை உணவு → கவிதைகள்

ஆசிரியரிடமிருந்து‍ …!


பொறுப்புத் துறப்பு

இந்தக் கதை வாய்மொழிக் கதையாக கேட்டதிலிருந்து இங்கு எழுதப்பட்டுள்ளது. இக் கதையில் வரும் பெயர்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனவே அவை கற்பனைக் கதை என்றும் நாம் கொள்ளலாம்.

இந்தக் கதையில் எவ்வித உட் பொருளும் கொண்டது இல்லை. அவர் அவர்கள் தாங்களாகவே எவ்வித பொருளும் கொண்டால் அதற்கு நாம் எவ்வித பொறுப்பு நம்மைச் சார்ந்தது அல்ல. இந்தக் கதை, கதை என்பதால் விலங்குகள் எதுவும் உண்மையில் துன்புறுத்த படவில்லை என்றும் உறுதி கூறுகிறோம். கதைக்காக மட்டுமே குதிரைக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் உறுதி கூறுகிறோம். யாரும் இந்த மாதிரி உண்மையில் செயல்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எடுத்துக் காட்டாக இந்தக் கதை

சரக்கு மற்றம் சேவை வரி பற்றி கூறும் கதை என்றோ

தமிழக அரசு பற்றி என்றோ

மத்திய அரசு பற்றி என்றோ

பசுக் காவலர்கள் பற்றியோ

நீட் தேர்வு பற்றி என்றோ

ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியல் பேச்சுகள் பற்றியோ

அல்லது பழங்கதை பற்றியோ

அல்ல.

எனவே கதையை பொழுது போக்கிற்கு மட்டுமே படியுங்கள். இல்லை என்றால் தயவு செய்து படிக்காதீர்கள். மீறிப் படித்தாலும் எதிர் வினை ஆற்றாதீர்கள். யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் இப்போழுதே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்

குதிரைக் கதை..!

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப்படையும் ஒன்று. சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை வளர்த்தனர்.

தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. அவர் ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய ஓட்டை வைத்திருந்தார். அந்த ஓட்டை வழியாக புல்லை நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கெளவிக் கொள்ளும்.

மிகவும் சிறிதளவு புல் மட்டுமே நாள்தோறும் போட்டு வளர்த்து வந்தார். அது உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே தருவார். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்றாகச் செலவு செய்து வந்தார்.

இவ்வாறு சென்று கொண்டு இருக்க ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர் கிருஷ்ண தேவராயர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “தெனாலிராமா! உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை?” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிராமனோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றார்.

“குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்தச் சிறிய ஓட்டை வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல் தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத் தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்குக் குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியைக் கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும்” என்றார்.

இதைக் கேட்ட மன்னர் கோபத்திலும் சிரித்து தெனாலிராமனை மன்னித்தும் விட்டார்.

பின் குறிப்பு

இந்தக் கதையில் வரும் குதிரைக்கு பதில் நாய் என்றோ மாடு என்றோ அல்லது வேறு மிருகமோ அவர் அவர் ஆசைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளலாம்.

அது போல் பெயர்களையும் அவர் அவர் ஆசைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளலாம்.

ஏன் கதையைக் கூட அவர் அவர் ஆசைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளலாம்.

இல்லை இங்கு எதுவுமே சொல்லப்படவில்லை என்றும் கதையை கொள்ளலாம்.

முழு சுதந்திரமும் உங்களுக்கே!

- அழகன் ரா திருப்பதி