×

→ ஆசிரியரிடமிருந்து‍

→  உறவு என்றொரு சொல் இருந்தால் →  கவிதை → சித்திர கவி →  கவிதைகள் → ‘கைபேசி’ கட்டுப்பாடு தேவை → ஒரு கிடாயின் கருணை மனு - திரைப்படம் → கவிதை → தமிழுக்குத் தனி ஒளிபரப்பு → தொண்டன் - திரைப்படம் → கவிதை

ஆசிரியரிடமிருந்து‍ …!


எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!

விடுதலைப் பெற்ற பாரத சமுதாயம் இவ்வாறு இருக்க வேண்டும் எனக் கனவு கண்டு அதனை இவ்வாறு கவிதையில் வடித்தான்.

இந்திய அரசியல் அமைப்பு இந்தியாவை 'குடியரசு முறை அரசாக' அறிவித்துள்ளது, முழுமையான அதிகாரம் நாட்டு மக்களிடம் இருக்கும்படியாக செயல் படுத்தப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரடியாக அரசை நிர்வாகம் செய்வார்கள். பாரதியின் கனவு போல் மக்கள் தான் மன்னர்கள்.

உண்மையில் அவ்வாறு தான் இந்திய அரசியல் செயல்படுகிறதா? இல்லை என்பது தான் இங்கு வேதனையான கசப்பான உண்மையாகும்.

ஆதிக்க வெறி பிடித்த சில நபர்கள் மக்களாட்சி என்ற பெயரில் ஆள்கிறார்கள். அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக தான் செயல்பட வேண்டும் என்ற உண்மையினை மறந்தும் மறைத்தும் செயல்படுகிறார்கள். உணர்ச்சிக் கொப்பளிப்பான வார்த்தைகளைப் பேசியும் நடித்தும் மக்களைத் திசை திருப்பி தங்கள் நலன்களை சாதித்துக் கொள்கிறார்கள். தொழில் சார் நடிகர்களை விட மிக அழகாகவே நடிக்கிறார்கள் இவர்கள்.

நமக்காக உருவாக்கும் சட்டங்கள் நமக்கானதாக இருக்கிறதா?

நமக்காக உருவாக்கும் சட்டங்கள் பற்றி நம்மைக் கலந்து ஆலோசிக்கிறார்களா?

நமக்காக உருவாக்கும் சட்டங்கள் பற்றி நாம் தேர்ந்து எடுத்து அனுப்பும் பிரதிநிதிகளுக்கு ஏதாவது தெரியுமா?

நமக்காக உருவாக்கும் சட்டங்கள் பற்றி பாராளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ பேசப்பட்டு இருக்கிறதா?

அனைத்துக் கேள்விகளுக்கும் இல்லை என்பது மட்டும் தான் பதிலாக இருக்கிறது.

பின் நமது பிரதிநிதிகள் எவ்வாறு தான் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களை முடியாட்சியின் மன்னர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் நினைத்துக் கொண்டு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவறாக மற்றும் மோசடியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் கையில் அனைத்து அதிகாரங்களையும் குவித்துக் கொள்ளவே சட்டங்கள் இயற்றுகின்றனர். அதிகார பரவலை விடுத்து அதிகார குவிப்பினை மட்டுமே விரும்புகின்றனர். நீட் தேர்வு, ஜிஎஸ்டி மாநில உரிமைகளையும் பறித்துக் கொண்டு அதிகார குவியலை செய்கின்றனர்.

குற்றப் பரம்பரை சட்டம் என்று மனிதனை அவமரியாதை படுத்தும் மோசமான சட்டம் ஒன்று ஆங்கிலயரால் ஏற்றப்பட்டு இருந்தது. அது சுதந்திர இந்தியாவில் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் தற்போதைய அரசு இந்திய மக்கள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் எனக் கருத்தில் கொண்டு குற்றப் பரம்பரை சட்டத்தினை விட மோசமான சட்டமாக எங்கும் ஆதார் எதிலும் ஆதார் என மக்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கும்படியாக ஒவ்வொரு சட்டங்களையும் உருவாக்கித் தங்களை மேம்படுத்தி வருகின்றனர். மக்களைத் திசை திருப்பப் பயங்கரவாதி சதி என்றும் நாட்டை உடைக்கச் சதி என்றும் பேசி ஏமாற்றி வருகின்றனர். இதுவும் போக அரசு அதிகாரிகளும் தங்கள் பங்குக்குத் தடியெடுத்த தண்டல்காரர்களாக வலம் வருகிறார்கள்.

மக்களே விழிதெழுங்கள். எந்த தனிப்பட்ட மனிதரும் வந்து நம்மை மீட்டுத் தரப்போவது இல்லை.

இங்கு நிர்வாகப் பொறுப்புக்கு வர நினைக்கும் மனிதர்களுக்கும் மன்னர்கள் போல் நாட்டைக் கைப்பற்றத் தான் நினைக்கிறார்கள். மக்களின் பிரதிநிதியாக செயல்பட அவர்கள் விரும்புவதும் இல்லை. அவர்களையும் கண்டு விலக்கும் பொறுப்பும் நம்மிடையே உள்ளது. நாம் மக்களாட்சி என்பதனை ஏற்றுக் கொண்டு உள்ளோம். எனவே இங்கு எந்தப் போரும் வரப்போவதும் இல்லை. போர் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற வார்த்தைகளை நம்பி எங்கிருந்தோ ஒருவன் வந்து நம்மைக் காப்பான் என்று எண்ணாமல் நம் பிரதிநிதிகள் நம் சொல்வதைக் கேட்காமல் செயல்படுவார்களே ஆனால் அவர்களை வெளியேற்றுவோம்.

நாமிருக்கும் நாடு நமது என்ப தறிந்தோம் - இது

நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்

என பாரதியின் வரிகளை ஞாபகத்தில் இருத்தி நாம் நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தேடுப்போம், நம்மை ஆள்பவர்களை அல்ல.

அதனை விடுத்தோமேயானால் நிலைமை கீழ்கண்டவாறு தான் இருக்கும்.

மக்களாகிய நாம் தான் இந்நாட்டு மன்னர்கள்.

மன்னர் ஆட்சி எப்போழுதோ ஒழித்துக்கட்டபட்டுவிட்டது. எனவே நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!

- அழகன் ரா திருப்பதி