×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ எழுதவே நினைக்கிறேன் → கவிதை → குதிரையடி சதுரங்க பந்தம் → போட்டுத்தள்ளு → மனிதா- மாற்றுக் குறையா மாதரின் மதிப்பை நீ குலைப்பது ஏன்? →  அன்புமொழி கிடைத்து விட்டால் → பொன்னினும் மேலான காலம் → சின்னச் சட்டை

ஆசிரியரிடமிருந்து‍ …!

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனிஉண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனிஉண்டோ?

இந்த வரிகள் பாரத சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பாரதி தான் கண்ட கனவினை பாடல் வழி வெளிப்படுத்தினான். இன்றைய நிலையில் நாம் எங்கு இருக்கிறோம். சிறு குழந்தைகளின் மதிய உணவுத் திட்டத்திலும் ஆதார் கட்டாயம். மதிய உணவுத் திட்டத்தின் நோக்கமே குழந்தைகள் பள்ளியை இடைவெளியில் நிற்பதை குறைப்பது தான். ஆனால் தற்போது நடப்பது என்ன?

மதிய உணவுத் திட்டத்தில் ஊழல் நடக்கிறது என்றால் அதைச் செய்பவர்களை தடுப்பதா? அல்லது அவற்றின் பயனாளிகளை இவர்களின் தவறுகளுக்கு பொறுப்பாக்குவதா? பயனாளிகளை பொறுப்பாக்கி அரசு ஊழியர்களுகளும் அரசும் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் தங்கள் பொறுப்பில் இருந்து விலகித் தங்களைப் பற்றி வீண் பெருமைகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

ஊழலை ஒழிக்கிறோம் என்ற போர்வை போர்த்தி ஆதார் என்ற முகமுடி அணிந்து திட்டத்தின் பயனாளிகளை ஒழித்துச் சில காசுகளை மிச்சப்படுத்தி நாளை மிகப் சீரிய நாட்டில் வாழப் போகிறோம் என்ற மாயையில் அல்லது போதையில் விழ்த்தப்பட்டு இருக்கிறாம்.

கண்ணிலாக் குழந்தைகள் போல் -- பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்

என்ற பாரதியின் வரிகளாய் மக்களும் செயல்படுகின்றனர்.

இந்த ஆதார் என்பது அனைத்து பிரச்சணைகளுக்கும் ஒரே தீர்வு என்று வீண் முழக்கமிட்டு வருகின்றனர். ஏற்கனவே கறுப்புப் பணத்தினை ஓழித்துக் கட்டிவிட்டோம்! ஆட்டைக் கடித்தது மாட்டைக் கடிக்கும் மாட்டைக் கடித்தது மனிதனைக் கடிக்கும் என்பது போல இன்று ஒவ்வொரு இடத்திலும் நாம் நமது உரிமைகளை நமது சுதந்திரத்தை இழந்து கொண்டு இருக்கிறோம் அதுவும் எவ்வாறு இழக்கிறோம் என்பது புரியாமலே.

ஆட்டைக் கடிக்கும் போது நாம் விழிந்துக் கொள்ளவில்லை அல்லது ஆடு தானே என்று நாம் இருந்து விட்டோம். அவ்வாறே மாட்டைக் கடிக்கும் போது. இப்போழுது நாம் கடிபட்டுக் கொண்டு இருக்கிறோம்.

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை யிழப்பாரோ?

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்

கைகொட்டிச் சிரியாரோ?

விழித்தெழுவோம் சுதந்திரத்தைக் காப்போம்.

ஒவ்வொரு நாளும் புது புதுச் சட்டங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடிமைப்படுத்தும் அல்லது நம் சுதந்திரத்தை விற்க கட்டயாபடுத்தும் விதமாக. மாற்றுக் கருத்து என்பது இல்லாமல் ஆக்குவோம் என்று தடி எடுத்து மிரட்டல்களாக.

இந்நிலையை நாம் நீடிக்க விட்டால் தன் சொந்த மண்ணிலே தான் ஏதிலியாக மாறி இருக்கும் கொடுமையை நாம் காணப் போகிறோம். மனிதர்களுக்காகத் தான் சட்டமே தவிர சட்டங்களுக்காக மனிதர்கள் இல்லை. அது போலவே மனிதர்களுக்காகத் தானே நாடே தவிர நாட்டிற்காக மனிதர்கள் கிடையாது. நாட்டுப் பற்று என்ற பொய்மை துணை கொண்டு செயல்படுபவர்களை அகற்றுவோம்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர் -- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

அதற்கான கடமையும் நம்மிடத்தில் உள்ளது. தற்பொது அதன் தேவையும் உள்ளது என்பதனை நாம் கவனத்தில் கொள்வோம்.

நாமிருக்கும் நாடுநமது

என்பதறிந்தோம் -- இது

நமக்கே உரிமையாம்

என்பதறிந்தோம் -- இந்தப்

பூமியில் எவர்க்கும் இனி

அடிமைசெய்யோம்

யந்திர சாலையென்பர்

எங்கள் துணிகளென்பர்

மந்திரத்தாலே யெங்கும் -- கிளியே

மாங்கனி வீழ்வ துண்டோ?

உப்பென்றும் சீனிஎன்றும்

உள்நாட்டுச் சேலைஎன்றும்

செப்பித் திரிவா ரடீ -- கிளியே

செய்வ தறியா ரடீ.

தேவியர் மானம் என்றும்

தெய்வத்தின் பக்திஎன்றும்

நாவினாற் சொல்வ தல்லால் -- கிளியே

நம்புத லற்றா ரடீ.

மாதரைக் கற்பழித்து

வன்கண்மை பிறர்செய்யப்

பேதைகள் போலுயிரைக் -- கிளியே

பேணி யிருந்தா ரடீ.

மீண்டும் பாரதியின் வரிகளை நம் மனதில் கொண்டு வெற்றி பெறுவோம். மனித சுதந்திரத்தை காப்போம். வெற்றி அடைய போராட்டக் களத்தில் இறங்குவோம்.

- அழகன் ரா திருப்பதி