×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ சித்திரக் கவி →  கவிதை → பாகுபலி 2 திரைப்படம் →  இலவசமாய் எவை இருக்க வேண்டும் → கழகம் → அழகோ அழகு → போராட்டம் → எழுதவே நினைக்கிறேன்

ஆசிரியரிடமிருந்து‍ …!


Socialization, Socializing என்ற இந்த இரண்டு வார்த்தைகள் தற்போது தனி மனிதர்களையும் நிறுவனங்களையும் ஆட்டிப் படைத்து வருகின்றன.

Socialization என்றால் சமூகமயமாக்கல், Socializing என்றால் பழகுதல் என்பது‍ பொருள். இந்தச் சமூகமயமாக்கல் மற்றும் பழகுதல் என்பது கணினி அடிப்படையிலான கட்டமைப்பில் மட்டுமே செயல்படுகின்றன. மெய்யான அதாவது நேருக்கு நேர் என்பது இல்லாமல் கணினியில் மட்டுமே மேற் கொள்ளப்டுகின்றன.

இவர்கள் இதனைச் சமூக வலைதளங்களின் மூலம் செயல்படுத்துகிறார்கள். இதனால் இவர்கள் தங்களது பணம், நேரம் ஆகியவற்றை மற்றும் முழுமையாக தங்களை ஒப்படைத்து அடிமைகளாய் ஆகி உள்ளனர்.

இவர்கள் (நாம் என்றே எடுத்துக் கொள்ளலாம்) தங்களது சந்தேகங்களைக் தீர்க்க மனிதர்களை நாடுவதில்லை. மனிதர்களைக் காணவே அஞ்சுகிறார்கள். இவற்றுக்கு கூகுளையே நாடுகிறார்கள். மனித உணர்வுகளிலிருந்து விலகியே வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் கூட்டமைப்பாக இருக்கும் இவர்கள் உண்மையில் தனித் தனித் தீவுகளாகவே இயங்கி வருகின்றனர். மனிதனின் வெற்றி சமூக கூட்டமைப்பில் தான் இருக்கிறது என்பதையும் மறந்து.

சமூக வலைதளங்களும், கணினி விளையாட்டுகளும் தான் உலகம் என்ற மாய வலைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு வழக்கின் போது “ஏன் விடியோ கேம் ஆக ஜல்லிக்கட்டை விளையாடினால் என்ற?” என்ற கேள்வி அங்கு எழுந்திருக்குமா? உண்மையில் இருந்து இவர்கள் விலகியே இருக்கிறார்கள் என்பதே இதனைக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமே இவர்களால் நண்பர்களாய் அல்லது கூட்டமாக செயல்பட எளிதாக உள்ளது. இவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் போதா அல்லது திரைப்படங்களுக்கு மேலும் சாப்பாட்டு விடுதிகளுக்கு கூட்டாகச் செல்லும் போது கூட இவர்களது உறவு நேருக்கு நேர் இல்லாமல் செல் போன் வழி இந்தச் சமூக வலைதளங்களுடன் தான் உள்ளதே தவிர உடன் செல்பவர்களுடன் இல்லை. இவர்கள் கூட்டாகச் சென்றதன் நோக்கம் தான் என்ன? சமூக வலைதளங்களில் பார்க்கும் போது இவர்கள் கட்டி வைக்கப்பட்ட நெல்லிக் கனி போல் இருக்கும் இவர்கள் உண்மையில் கட்டு அவிழ்க்கப்பட்டால் சிதறி விடும் நெல்லி போல தான் இருக்கிறது இவர்களது உறவும் நட்பும். சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து கண்காணிப்புக் காமிராக்கள் மற்றும் ஆதார் மூலம் பின்தொடரல்களின் அபாயம் இவர்களுக்குப் புரியாமலே போய்க் கொண்டு இருக்கிறது. இவற்றின் கெடுதல்கள் புரியாமலே இவற்றில் இயங்கி வருகிறார்கள். மனித மான்புகளை அழிக்கும் செயல்கள் புகழப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அனைத்தையும் கண்காணிக்கும் ஓர் அரசு என்பது மக்களுக்காக இயங்காது. அதில் மக்கள் நலன், அனைவருக்குமான நலன் என்பது முற்றிலுமாக இருக்காது.

செல்பி (Selfie) என்னும் சுய புகைப்படம் எடுத்தலில் மூழ்கி நவீன நர்சீசஸ்களாக செயல் இழந்து நிற்கின்றார்கள். மேலும் கண்காணிப்புக் காமிரக்களில் தாங்கள் அழகுறத் தெரிவதற்காகத் தங்களை அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.

கண்ணாடியில் நாம் பார்க்கும் நம் பிம்பம் கூட நம் பிம்பம் அல்ல என்று சொல்லும் அளவிற்குத் இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளது. இந்த வளர்ச்சி சமுதாயித்திற்கு அழிவினை மட்டுமே தேடித் தருவதாக உள்ளது.

வணிக நிறுவனங்களும் இந்தச் சமூகமயமாக்கல் மூலம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. இவர்கள் தங்கள் செயல்பாடுகளில் உள்ள கவனத்தை விடச் சமூக வலைதளங்களில் தங்களை பின் தொடர்பவர்களின் கூட்டத்தினை அதிகரிக்கச் செய்வது தான் தங்கள் முக்கியச் செயல் என்று கருதி முறையற்ற வழிகளில் பின்தொடர்பவர்களைக் கூட்டி வருகின்றனர். அதற்கு உதவவுதற்கு என்றே காளான்கள் போல் புதுப் புது நிறுவனங்களும் முளைத்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிறுவனங்களும் செயல்பாட்டிற்கு எனச் செயலிகள்(apps) வழங்குகின்றன. அதனால் நாம் செல்பேசியில் எண்னெற்ற செயலிகள் இடம் பெற்று எவை எவை எதற்கு என்றே தெரியாமல் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி போல் பயன் இல்லாமல் உள்ளன.

மேலும் இந்தச் சமூக வலைதளங்கள் பற்பல வழிமுறைகள்(algorithms) துணை கொண்டு பொய்யான தகவல்கள் மற்றும் பொய்யான முன்னுரிமைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களளைக் கொடுத்து மக்களை விழ வைக்கின்றன. மக்களை விழச் செய்து மக்களை அடிமையாக்க நினைக்கின்றன. நண்பன் என்று கூறிக் கொண்டு மக்களை முன்னேற்றம் அடையச் செய்யாமல் வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுச் செயல்படுகின்றன. நிறுவனங்களும் தாங்கள் எந்த நோக்கித்திற்காக நிறுவப்பட்டோம் அதனைத் தான் செயல்படுத்துகிறோமா என்று தங்களை தாங்களே தற்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டிய இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளன. சீரிய செயல்பாடு சிறந்த நோக்கம் அவற்றை அடைய வெளிப்படையான உண்மையான வழிமுறைகள் என்பதனைக் கொள்கைகளாக கொண்டு செயல்பட வேண்டும்.

அழிவுப் பாதையில் முன்னேறுவது முன்னேற்றம் அல்ல என்பதனை உணர்வோம். மாய அலையில் உள் மூழ்காமல் உண்மையைத் துணை கொள்வோம். உடன் இருக்கும் மனிதர்களுடன் பேசுவோம், பகிர்வோம். வாழ்க்கை வாழ்ந்து பார்க்கத்தான். உண்மையாக வாழ்வோம். உண்மையுடன் வாழ்வோம். பொய்யான தோற்றங்களை உண்மை என்று கருதாமல் அவற்றிலிருந்து மீண்டு நம்மை உயிர்ப்புடன் வைப்போம். இந்தச் சமுதாயத்தையும் உயிர்ப்புடன் ஆக்குவோம்.

- அழகன் ரா திருப்பதி


(பற்பல தரவுகளுக்காக திரு. பொ. சிவகுரு ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு நன்றி)