×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள்

- இரா. இராஜாராம்


அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள்

- இரா. இராஜாராம்


இந்தியக்கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களது கலாச்சாரங்களுக்கு ஏற்பத் திருமணங்களை நடத்தி வருகின்றனர். ‘தொல்காப்பியத்தில்’ திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே குடும்ப வாழ்க்கையில் பழந்தமிழர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. காதல் திருமணங்கள் நடைபெற்றதாகவும்இ ‘புறநானூற்றின்’ வாயிலாக அறியமுடிகிறது. அதில் ஆண்இ பெண் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதல் செய்து தங்கள் விருப்பத்தைப் பெற்றோரிடம் தெரிவிக்க பெரியோர்கள் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மங்கலநாண் (தாலி) கட்டப்பட்டதாகப் பழமையான நூல்களில் சான்றுகள் எதுவும் இல்லை. பிற்காலத்திலேயே திருமணத்தின் அடையாளமாகத் தாலிகட்டுவதும், மணமக்கள் இருவருக்கும் கால்விரல்களில் ‘மெட்டி’ அணிவிப்பதும் வழக்கமாகியுள்ளது. திருக்குறள் வாழ்க்கைத்துணை நலத்தில்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

என்று இல்வாழ்க்கையின் உன்னத நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையோர் விவசாயம் செய்து வந்த நம் நாட்டில் பகல் முழுவதும் விவசாயத் தொடர்பான வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப், பெரும்பாலும் இரவிலேயே திருமணங்களை நடத்தியுள்ளனர். அதனாலேயே இரவில் மட்டுமே தெரியும் அருந்ததி, நட்சத்திரத்தை மணமக்களுக்குக் காண்பித்துள்ளனர்.

இன்றும் தமிழகத்தில் கம்பளத்தார் என்ற சமூகத்தினர் தங்கள் சொந்த கிராமத்தில் வெட்ட வெளி மைதானத்தில் வைத்து இரவில் திருமணம் நடத்துகின்றனர். மேலும் இவர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பல திருமணங்களை நடத்துவதும் உண்டு. இரவில் திருமணம் முடிந்து அனைவரும் உணவு உண்ட பின் பாரம்பரியமிக்க ‘தேவராட்டம்’ என்ற உன்னதக் கலாச்சார நடனத்தைச் சிறுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வரை தேவதுந்துபி’ (உறுமி) என்ற இசைக்கருவியின் பல்வேறு மெட்டுகளுக்கேற்பவும் கலைநயத்துடனும் 2மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஆடுகின்றனர். இதில் மணமகனும் பங்கேற்று ஆடுவதும், அதனை மணமகள் தன்தோழிகளுடனும், உறவினர்களுடனும் கண்டு மகிழ்வதும் உண்டு.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மின்சாரமே இல்லாத அதிரவைக்கும் ஒலி பெருக்கிகளின் ஓசையின்றி, மங்கல வாத்தியங்களின் இயல்பான இசை ஒலியில் வீட்டில் வைத்தோ, அருகில் உள்ள கோவில்களில் வைத்தோ எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் சில நாட்களுக்கு முன்பே உறவினர்கள், வெளியூர்களிலிருந்து வருகை தந்து திருமணத்திற்கு உடன் இருந்து உதவியும் வந்தனர். அச்சமயத்தில் உறவினர்கள் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்வதும், விவசாயம், விளைபொருள்கள் தொடர்பான கருத்துக் களைப் பரிமாறிக்கொள்வதும்;, தங்கள் வீட்டில் திருமண வயதில் உள்ள பிள்ளைகளின் விவரங்களைப் பற்றிப்பேசுவதும் பொருத்தமாக இருப்பின் தங்கள் ஊருக்குப் பெண்ணைப் பார்க்கவோ, பையனைப் பார்க்கவோ வருமாறு அழைப்பு விடுப்பதும் உண்டு. திருமணம் முடிந்து மொய் எழுதும் பழக்கம் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் வகையில் குறைந்த ஒரு தொகையினை அனைவரும் ஒன்று போல் கொடுத்துப் பெயர் பதிவு செய்துள்ளனர். இது பின்னாளில்; வசதிக்கேற்றவாறும்இ விருப்பத்திற்கேற்றவாறும் மாறிவிட்டது.

மொத்தத்தில் நம் முன்னோர்கள் தங்களின் பழக்கவழக்கங்களிலும், உணவு மற்றும் உடை விஷயத்திலும், திருமண வைபவங்கள் மற்றும் இதர குடும்ப நிகழ்ச்சிகளிலும், பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும் எதார்த்தமான, எளிமையான நடைமுறைகளையே பின்பற்றி வந்தனர். இருபெரும் தலைவர்களாகிய மகாத்மா காந்தி மகனுக்கும் இராஜகோபாலாச்சாரியார்; மகளுக்கும் நடைபெற்ற திருமணம் மிக எளிமையான முறையில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் இருக்க மகாத்மா காந்தி தன் கைப்பட நூற்ற நூல் சிட்டத்தை மணமக்களிடம் கொடுத்து ஒருவருக்கொருவர் அதனைக் கழுத்தில் அணிவித்துப் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகே இரு பெருந்தலைவர்களின் வீட்டுத்திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிந்து நாட்டு மக்கள் வியந்தனர்.

சமீப காலங்களில் ஒருவரைப் பார்த்து மற்றவர் தங்கள் வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் மற்றவர்கள் வியக்கும் வகையில் விமர்சையாகத் திருமணத்தை நடத்திடவே விரும்புகின்றனர். திருமண அழைப்பிதழ் தொடங்கித் திருமண மண்டபம், விலை உயர்ந்த புத்தாடைகள், உணவு ஏற்பாடுகள், பாட்டுக்கச்சேரிகள், பல்லாயிரம் ரூபாய்க்குப் பட்டாசுப் பண்டல்கள், நண்பர்களைத் திருப்திப்படுத்த மதுவகைகள் எனத் தேவையற்ற செலவினங்களுக்குப் பெரும்பொருட்ச் செலவு செய்து பின்னர் பொருளாதார நெருக்கடியில் வருந்துகின்றனர். திருமண விருந்தில் வகைவகையான உணவுப் பதார்த்தங்களைத் தயார் செய்து அவசர அவசரமாகப் பரிமாறிவிட்டுச் செல்வதும், ஒன்றைச் சாப்பிடுவதற்குள் மற்றொன்று என இலைகளில் கேட்காமலேயே வைத்துவிட்டுச் செல்வதும் அடுத்த பந்திக்குக் காத்திருப்போர் அருகாமையில் வந்து நிற்பதும் சாப்பிடுபவர்களுக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை உண்டுபண்ணி அவர்கள் சரிவரச்சாப்பிடாமல் இலையை மூடிவிட்டு எழுந்து சென்று விடுகின்றனர். இதனால் உணவுப்பொருட்கள் வீணாவதோடு, நன்றாக நிதானமாகச் சாப்பிட்ட திருப்தியும் இன்றித் திருமண வீட்டை விட்டுச்செல்ல நேரிடுகிறது.

திருமண நிகழச்சியில் இரு வீட்டாரும் திருமணத்திற்கு வருகை தருபவர்களைப் பாரபட்சமின்றி இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதுதான் முதன்மையானதும், அவசியமானதுமாகும். மங்கலவாத்தியங்கள் முழங்க மங்கலநாண் அணிவிக்கின்ற நேரத்தில் பண்டல் பண்டலாகப் பட்டாசுகளை வெடித்துப் பெருமளவிலான ஓசையினையும், நச்சுப்புகையினையும் உண்டு பண்ணும் அமங்கலமான செயல் அறவே தவிர்க்கப்படவேண்டும். எந்த வகையிலும் தேவைக்கு மிகுதியாக உணவுப்பொருட்களை இலைகளில் பரிமாறி வீணாக்கப்படுவதைத் தவர்த்தாக வேண்டும். திருமணத்திற்கு வருகை புரிந்தோர். ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவதற்கு ஏதுவாக பல்லாயிரம் செலவில் மண்டபத்தையே அதிரவைக்கும் பாட்டுக்கச்சேரிகளைத் தவிர்த்து இனிய மெல்லிய இசையினைக் குறைந்த ஒலியளவில் ஒலிக்கச் செய்து இனிமையாக்கலாம். நிறைவாக வழங்கப்படும் தாம்பூலப் பைகளில் பயன்தரும் மரக்கன்றையோ, அல்லது பயனுள்ள சிறுபுத்தகத்தையோ வழங்கி வருகை புரிந்த அனைவருக்கும் நேரிலோ ஒலிபெருக்கியின் மூலமாகவோ நன்றி தெரிவித்திடல் நன்று, திருமணநிகழ்வில் ஆடம்பரச்செலவுகளை அறவே தவிர்த்தும், எந்த நிலையிலும் மது அரக்கனைத் திருமண நிகழ்வில் தலைகாட்டவிடாமல் தடுத்தும். உன்னதமான, உயர்வான கலாச்சாரத்தை வெளிபடுத்தும் விதமாகத் திருமண நிகழ்ச்சிகள் அமைத்திடல் வேண்டும். மேலும் வசதி படைத்தவர்கள் எளிமையான முறையில் தங்கள் வீட்டுத்திருமணங்களை நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும்.


கட்டுரையாளர் - சுற்றுச்சூழல் ஆர்வலர்

கைபேசி : 97 91 26 05 26

இமெயில் : rajaram971956@gmail.com