×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

ஆசை மனம் மாறுமா?

- மு. செகசோதி


ஆசை மனம் மாறுமா?

- மு. செகசோதி


“மாப்பிளே! உங்க வயறு மட்டும் இப்படித் தினமும் பெருத்துக்கிட்டே போவுது” என்றார் வையாபுரி தன் தங்கை கணவன் ஆனைமலையைப் பார்த்து.

மச்சான் அங்கே மட்டும் என்ன வாழுது? அக்கா வகையா ஆக்கிப் போடுது. தின்னுட்டுக் குட்டியானை அசைஞ்சாப்பிலே நடக்கிறீங்க” என்றான் ஆனைமலை திருப்பி.

”உம், குடுத்து வச்சவர்யா. தங்கச்சி வயக்காட்டுக்குப் போய் வேலை பார்த்து, உமக்கு ஆக்கிப் போடுது பாரும். வேலை வெட்டி இல்லாத மனுசனுக்கு”. இது வையாபுரி.

”ஆமா மச்சான். நீர் வேலை பார்த்துத் தவிச்சுப் போனீராக்கும்” கேலி செய்தான் ஆனைமலை.

”ஆமா, விடியக்காலம் போனா சாயங்காலம் வரைக்கும் தொண்டைத் தண்ணியைக் குடுக்கணும்” என்றார் வையாபுரி.

”உம், வாத்தியார் வேலையிலே தவிச்சுப் போய்ட்டீங்க மச்சான். நாற்காலியிலே உட்கார்ந்துக்கிட்டு படிங்கடான்னு சொல்வீங்க. அதிலே தொண்டைத் தண்ணி வத்திப் போவுதாக்கும்” விடவில்லை ஆனைமலை.

”நாங்க சொல்லிக் குடுக்காமலா, எத்தனை பேர் அமெரிக்காவுக்குப் போயிருக்கான்” பெருமைப்பட்டார் வையாபுரி.

”ஆமா, ஆமா, உங்ககிட்டே படிச்சிட்டு நிறையப்பேர் ஜெயிலுக்குள்ளே இருக்காங்களே, அதெல்லாம் சொல்ல மாட்டீங்க” என்றான் ஆனைமலை.

”நாங்க ஒழுங்காத்தான் சொல்லித் தாரோம். ஜெயிலுக்குப் போங்கடான்னா சொல்வோம்” என்றார் வையாபுரி.

பொன்னுத்தாய் அதற்குள் அங்கு வந்து விட்டாள்.

”அண்ணே, உங்க மாப்பிள்ளையைக் குறை செல்லாமல் உங்களாலே இருக்க முடியாது” என்றாள்.

”அடேயப்பா, உன் புருசனை நீதான் மெச்சிக் கொள்ளணும்” என்றார்.

ஆனைமலை ஆள் பார்க்க நன்றாக இருப்பான். வாட்ட சாட்டமான உடம்பு. முகம் அழகாக இருக்கும். அவனைக் கட்டிக்கணும்னு நிறையப் பொண்ணுகளுக்கு ஆசை. போட்டி போட்டுப் பெண் தருவதாகச் சொன்னார்கள். ஆனைமலை எப்போதாவது வேலைக்குப் போவான். விவசாய வேலை எல்லாமே தெரியும். உழவு உழுவதற்கு, வாய்க்கால் போட, கதிர் அடிக்க, இப்படி எந்த வேலைக்குக் கூப்பிட்டாலும் போவான். இப்போ டிராக்டர் வச்சு உழவு, கதிர் அடிக்க மிஷின், இப்படி எல்லா வேலையும் இயந்திரமா மாறிப் போச்சு. அவனுக்கு எப்போதாவதுதான் வேலை.

எல்லாப் பொண்ணுகள் போட்டி போட்டாலும் பொன்னுத்தாய்தான் ஜெயிச்சாள். “ஆனைமலையை எப்படி வளைச்சுப் போட்டுட்டா” என்று மற்றப் பெண்கள் பொறாமையில் பேசினாலும் அதையெல்லாம் பொருள்படுத்தவில்லை பொன்னுத்தாய். அவன் வேலை வெட்டி இல்லாமல் இருந்தும் அவள் கவலைப்படவில்லை. காட்டு வேலைக்குப் போய்ச் சிக்கனமாகச் செலவு செய்து தன் கணவனையும் இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறாள்.

ஆனைமலை ஒருநாளும் குடிப்பது இல்லை. பீடி, சிகரெட் எதுவும் கிடையாது. “அதுபோதும், வேட்டி உருவிக் கிடக்கிறது கூடத் தெரியாமல் குடிச்சிட்டுத் தெருப்புழுதியிலே உருண்டு கிடக்கிற ஆம்பளை இல்லை என் புருசன்” என்று பெருமைப் படுவாள் பொன்னுத்தாய்.

பிள்ளையார் கோவிலில் உலகப்பன் தாத்தா துண்டை விரித்துப் படுத்திருந்தார். லேசாகக் கண்ணை மூடி இருந்தார். அவரிடம் பேச்சைக் குடுத்தால் போதும். சரமாரியாய்ப் பொழிவார்.

”அரசியல் பேச வந்திட்டாங்க. எவம்லே இப்போ யோக்கியமா இருக்கான். வந்திட்டீங்க அரசியல் பேச” என்று வம்புப் பேச்சை அவரிடம் தொடங்கி விடுகிற இளைஞர்களைச் சாடுவார்.

“அந்தக் காலத்திலே காந்தித் தாத்தா – கதர் வேட்டியும், கதர்த் துண்டும் உடுத்திக்கிட்டு – தண்டி வரைக்கும் நடந்தாரே. உப்பு சத்தியாக்கிரகம், தெரியுமாடா உங்களுக்கு அதெல்லாம்” என்று அலறத் தொடங்கி விடுவார்.

பிள்ளையார் கோவில் வடக்கு மூலையில் ஆடு, புலி ஆடிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். அதைச் சுற்றி வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம். ஆனைமலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

”அக்கா, உங்களைக் கூப்பிட்டுட்டு வரச் சொல்லிச்சு” பக்கத்து வீட்டுச் சின்னப் பொண்ணு -பத்து வயதுச் சிறுமி- ஆனைமலையிடம் ஏதோ சொன்னாள்.

பதறி அடித்து ஓடினான் ஆனைமலை. “மச்சான், நான் பிழைக்க மாட்டேன். நீ இன்னொரு பொண்ணைப் பார்த்துக் கட்டிக்க. என் பிள்ளைகளைக் காப்பாத்திரு” அழுதாள் பொன்னுத்தாய்.

இரண்டு பிள்ளைகளைப் பெற்றவுடனே குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றாள் பொன்னுத்தாய். ஆனைமலை அனுமதிக்கவில்லை. இப்போது மாதமாக இருக்கிறாள். பக்கத்து ஊருக்கு ஒருநாள் போய் வந்தாள். அங்கே ஒரு பாட்டி இதுபோல உள்ளதைக் கலைப்பதில் கெட்டிக்காரி. ஆனால் ஏடாகூடம் ஆகிவிட்டால் …. உயிருக்கே ஆபத்து.

அப்படித்தான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். “எப்படியாவது டவுனுக்குக் கொண்டு போய் என் பொன்னுத்தாயைக் காப்பத்தணும்” ஆனைமலைக்கு அழுகை அழுகையாய் வந்தது.

சின்னது இரண்டும் அழுதுகொண்டு அவன் காலைச் சுற்றிவந்து கொண்டிருந்தன.

”பணத்துக்கு என்ன செய்ய?” இடிந்து போய் உட்கார்ந்தான். வையாபுரி வந்தார். அவன் கேட்காமலே பணம் கொண்டு வந்தார்.

டாக்சி ஏற்பாடாயிற்று

”இந்த பாரு மச்சான். வீண் செலவு செய்யாதே. நான் பிழைக்க மாட்டேன்” என்றாள் பொன்னுத்தாய்.

டாக்சி பாதியிலே திரும்பியது. பொன்னுத்தாய் இறந்து விட்டாள். வையாபுரி தோளிலே சாய்ந்து ஒரு குழந்தையைப் போல அழுதான் ஆனைமலை.

”அம்மன் கோவில்லே பூக்கட்டிப் பார்த்தேன். அப்பவே சரியா வர்லை. ஆனால் பொன்னுத்தாய் எங்கே கேட்டாள்? மச்சானைத்தான் கட்டுவேன்னு தவம் இருந்தாள்”. இது பொன்னுத்தாயைப் பெற்ற அம்மாவின் புலம்பல். குழந்தைகள் வீல், வீல் என்று அழுதன.

மீனம்மா- பொன்னுத்தாயின் தங்கை – அந்தக் குழந்தைகளை அழைத்துப் போனாள். சின்னக் குழந்தைக்குப் பாட்டிலில் பால் ஊற்றிக் கொடுத்தாள். எதிர்த்த கடை உளுந்த வடையைப் பதம் பார்த்தது பெரிய குழந்தை.

வந்த ஜனம் எல்லாம் போய் விட்டார்கள். வீடு வெறிச் சோடிக் கிடந்தது.

”இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கஷ்டப்படுவீங்க” என்று ஆரம்பித்தாள் பொன்னுத்தாயின் அம்மா.

அவளுக்குச் சின்னவளைக் கொடுக்கச் சம்மதம். “வேறு பொண்ணைக் கட்டினால் சரி வராது. சின்னவளைக் கட்டினால் -அக்கா பிள்ளைகள்- இவள் பார்த்துக் கொள்வாள்” என்று நம்பினாள். எத்தனையோ நாள் படையெடுத்தாள் மாமியார்.

ஆனைமலை அசையவே இல்லை.

”ஏய், உன் சின்னது அலறுது டோய்” என்றான் அவன் கூட வேலைக்கு வந்த மணி.

இரண்டு பேரும் குழி வெட்டிக் கொண்டிருந்தார்கள். ஏதோ குழாய் பதிக்கப் போகிறார்களாம். “மிஷினை வச்சுத் தோண்டப் போறாங்களாம். நமக்கு வேலை போய்விடும்” என்றான் மணி.

ஓடிப் போனான். மரத்துக்கிளையில் பொன்னுத்தாய் உடுத்தியிருந்த சேலையில் தொட்டில் கட்டிப் போட்டிருந்தான். சின்னவளுக்குப் பாலைக் கொடுத்து விட்டு.

மூத்தவளிடம் ”ஏ, குட்டியம்மா, நிழல்லேயே விளையாடு. தங்கச்சிப் பாப்பா அழுதா தொட்டிலே ஆட்டு” என்று மறுபடியும் குழிவெட்டப் போனான் ஆனைமலை. மணி குனிந்து தோண்டிக் கொண்டிருந்தான். எங்கும் வெட்ட வெளி. மேகம் இல்லாத வானம். வியர்வையைப் பெரு விரலால் துடைத்துவிட்டுக் குழிக்குள் இறங்கினான் ஆனைமலை.


முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். கோவில்பட்டிப் பகுதியில் பசுமை இயக்கம் தொடங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி சூழல் விழிப்புணர்வை இப்பகுதியில் உருவாக்கி வருபவர். 1600 கி.மீ நடந்து 61 நடைப்பயணங்களில் சூழல் விழிப்புணர்வை இப்பகுதியில் வளர்ப்பவர். காட்டுப்பூக்கள் என்ற சிறிய நூலுக்குத் தேசிய அளவில் பரிசு பெற்றவர்.