×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ ஆட்சி மொழி →  கவிதை → ஆசை மனம் மாறுமா → கவிதை → சில்லென ஒரு மழைத்துளி → கவிதை → அதிகரித்து வரும் ஆடம்பரத் திருமணங்கள் → கவிதைகள்

கருப்பன் - முந்தைய நிலாக்கள் ...

சில்லென ஒரு மழைத்துளி

- ரா. ஷ்ரவண்யா


சில்லென ஒரு மழைத்துளி

- ரா. ஷ்ரவண்யா


ஊரெங்கும் ஆற்றுப்பெருக்காய் ஓடும் நீர். பல இடங்களில் நீர் தேங்கி மக்கள் பெரும் அவதி. அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியரோடு சேர்ந்து சேதம் அடைந்த பகுதிகளைப் பார்வை இட்டனர். மக்களிடம் அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்த ஆட்சியரும் அதிகாரிகளும் விரைவில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். வெள்ளத்தடுப்பு பணிகளும் அத்தியாவசிய பொருட்களின் வினியோகமும் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக நமது செய்தியாளர் களத்திலிருந்து தெரிவிக்கிறார். நேரடி ஒளிபரப்பாகத் தாழ்வான பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மக்களின் அவதிகளைக் கேட்டு நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நமது செய்தியாளர். மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் தெரிவித்தார். மழை நீர் தேக்கத்தாலும், மரங்கள் சாலையில் விழுந்ததாலும் போக்குவரத்து பாதிப்பு. அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மழைக்காலம் என்பது வந்தாலே ஓயாமல் கேட்கும் வசனங்கள். நாமும் அப்படிப்பட்ட சங்கடங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகியிருப்போம். இருண்ட வானிலையைப் பார்க்கும் போது இருள் சூழ்ந்துள்ளது போல்தான் தோன்றும். வழக்கமாக நம்மிடம் இருக்கும் உத்வேகம் குறைந்தே காணப்படும். ஆங்கிலத்தில் ‘GLOOMY WEATHER’ என்றழைப்பார்கள். அது உற்சாகமற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்பது பொதுக்கருத்து. அழகான சூரிய ஒளி படர்ந்த நாளை ‘BRIGHT AND SUNNY’ எனக் கூறி உத்வேகத்தோடு செயல்பட ஏற்றக் காலமாகவும் கூறுவது மேலைநாடுகளில் வழக்கம்.

நம் நாட்டில் வெட்பம் அதிகமாக இருப்பதால் மழைக்காலம் வரும்போது சற்று சந்தோஷம் வரும். கூடவே தண்ணீர் தேவைகள் தீரும் என்பது மற்றொரு காரணம். ஆகமொத்தம் ஒரு தராசில் வைத்துப்பார்த்தால் மழைக்காலம் சங்கடங்கள் தரும் காலம் என்றே நாம் உணர்ந்து பழகிவிட்டோம்.

ஆனால் மழைநாள் எவ்வாறெல்லாம் தன் அழகை உணரவைக்க முயல்கிறது! உணர்ந்தால் மட்டுமே புரியும், உணர ஒரு சிறிய முயற்சி.

காலை எழுந்தவுடன் சுட்டெரிக்கும் சூரியன் இல்லை. மாறாகக் குளிர்ந்த இதமான ஒரு தட்பவெட்பம். குளிர்ந்த காற்றும் வீசும். லேசான குளிரில் இருக்கும்போது சூடான வெந்நீரில் ஒரு குளியல் போட்டால் உடலுக்குப் பரவசமாக இருக்கும், அதில் ஒரு தனி இன்பமே உண்டு. இதை வெயில் காலத்தில் உணர முடியுமா?

பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்வதில் சிரமங்கள் அதிகம் உள்ளது. மறுக்க அதில் ஏதும் இல்லை. ஆனால் அதுவே நாம் பொதுவாக புறப்படும் நேரத்திற்கு முன்னரே கிளம்பினால் மெதுவாக மழையில் பயணிப்பதும் சுகமே.

வேலைகள் இல்லாமல் விடுமுறை நாளன்று வீட்டில் இருப்பதாயின் அது பேரதிர்ஷ்டம். மழை பெய்வைதை காண்பதில் என்ன ஒரு அழகு! கண்ணை மூடிக் கேட்டால் மழை விழும் சப்தம் ஆனந்தம். கைகளை நீட்டி நம் உள்ளங்கையில் அந்த குளிர்ந்த நீர் விழும் போது ஏற்படும் ஒரு சந்தோஷம். வாசலில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் பழைய காகிதங்களைக் கொண்டு கப்பல் செய்துவிட்டு விளையாடுவது. சிறுவர்களாய் இருக்கும் போது செய்திருப்போம். இன்று செய்தால் யார் என்ன நினைப்பார்களோ என்ற ஒரு தயக்கம். வளர்ந்துவிட்டபின் இப்படிச் சிந்தித்து தயங்கி வாழ்வையே வாழ மறந்துவிட்டோம்.

இரவில் மின்வெட்டு ஒரு பெரும் சங்கடம். பலபேரின் புலம்பல்கள் இது. இணையத்தில் உலாவமுடியவில்லை, தொலைக்காட்சியில் நாடகம் பார்க்க முடியவில்லை, கை பேசியில் பேட்டரி தீர்ந்துவிட்டது என அடுக்கடுக்கான குறைகள்.

அன்றெல்லாம் மின்வெட்டென்றால் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சீட்டு விளையாடுவோம்; பாட்டுப் போட்டிகள் நடத்துவோம்; மெழுகுவத்தி வெளிச்சத்தில் நிழல் விளையாட்டு விளையாடுவோம். இன்று இவை எதற்காவது நம்மிடம் நேரம் இருக்கிறதா? அந்ந மின்வெட்டு நாளிலாவது அதைச் செய்து குடும்பத்துடன் நேரம் செலவழிப்போமே.

சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தருவது இந்த மழைக்காலம். நாம்தான் அதைப் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளத்தெரியாமல் கையில் கிடைக்கும் பொக்கிஷத்தை கை நழுவ விட்டுவிடுகிறோம்.

ஜன்னல் ஓரம் அமர்ந்து சூடான தேநீரை அருந்திக்கொண்டே அந்த மழைத்துளியைக் கண்டு ரசிக்கும் போது சாமானியனே கவிஞனாவான். கவிஞன் எப்படியெல்லாம் படைப்பான்!

“ மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்ணை மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்”

- ( வரிகள் கவிப்பேரரசு வைரமுத்து)

எவ்வளவு அழகான வரிகள். மழையை உண்மையாய் உணர்ந்திருக்கிறார், உணர்த்தியிருக்கிறார் அந்தக் கவிஞர்.

இந்தப் பதிவினை எழுதி முடித்துவிட்டு வெளியில் எட்டிப்பார்த்தேன் மழை பெய்யத்தொடங்கிவிட்டது. நான் செல்கிறேன் அந்த மழையில் ஆனந்தமாய் நனைய. சின்ன குழந்தையாய் மாறி

என் கவலைகளையும் சிந்தனைகளையும் மழைத்துளியில் கரைத்துவிட்டு நிம்மதியாய் மண்ணிலே சொர்க்கத்தைக்காண.

நீங்களும் காணுங்களேன், பின் நிச்சயம் மழைக்காலம் அழகாகத்தான் தெரியும்.


கம்பெனிகள் சட்டம் ஆலோசகராக(Practising Company Secretary) செயல்பட்டு வருபவர். உளவியலாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். தொடர்புக்கு : shravaa6789@gmail.com