×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ பட்டாசுகளைத் தவிர்த்துப் பயன் பல பெற்றிடுவோம் → கவிதை → யோக நல வாழ்வு → கவிதைகள் → தூய்மை

ஆசிரியரிடமிருந்து‍ …!


நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை.

ஒளவையாரின் மூதுரையில் வரும் பாடலாகும். இப்பாடலில் நாம் பார்க்கப் போவது முதல் இரண்டு வரிகள் மட்டுமே. இந்த இரண்டு அடிகள் சொல்வது இயற்கையின் மாறாத உண்மையை. இயற்கையை மீறி நாம் செயல்பட்டால் நாம் துன்பம் மட்டுமே அடைவோம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையை. இவ்வாறு நாம் அறிந்து இருந்தும் புரிந்து இருந்தும் நாம் நம்மின் தனிப்பட்ட சுயலாபத்திற்காக இயற்கையை அழிக்க நினைத்து வேறு வேறு பிரச்சனைகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.

இவ்வாறாகப் புல்லுக்கு நீர் கசிந்து புல் வளர்வது இயற்கை என்று உணராமல் அது எப்படி நெல்க்கு செல்லும் நீரில் புல் எப்படி வளரலாம் எனக் கொண்டு நெல்லுக்கும் நீர் செல்லாமல் தடுத்து அதனால் புல்லுக்கு நீர் வராமல் செய்து விட்டேன் என்று ஒருவர் கூறினால் அவரை எவ்வாறு பாராட்டுவது.

அவர் வேறு யார் ஒர் ஐந்து மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் நம் நாட்டினை எங்கோ கொண்டு செல்கிறேன் என்று கூறி நம் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற அதே மனிதர் தான்.

சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரில் முறைசாரா தொழில்களை முறைக்குள் கொண்டு வந்து அனைவரையும் மேல் நோக்கிக் கொண்டு செல்கிறேன் என்ற போர்வை போர்த்தி முறைசாரா தொழில்களை அனைத்தையும் முடக்கிய பெருமை அவரையே சாரும். ஆனால் அந்தப் பெருமைக்கு உரிய மற்றவர்கள் நாம் தாம். நாம் தேர்ந்து எடுத்த நமது பிரதிநிதிகள் தான்தோன்றித்தனமாக செயல்படுவதைக் கண்டு எவ்வித முறைகளையும் மாற்ற நினைக்காமல் இருந்த நமக்கும் இந்தப் பெருமையில் பங்கு இருக்கிறது. பெருமிதம் கொள்வோம். நெல்லுக்குச் செல்லும் நீர் வழி புல் வளரக் கூடாது என்பதினால் நெல்லுக்கே நீர் செல்லாமல் தடுத்த செயலுக்காக நாம் பெருமிதம் கொள்வோம்.

நாட்டின் நலன் காக்க மக்கள் அனைவரையும் பலி கொடுத்து நாட்டினை காக்கும் புதுப் புது நுட்பங்களை உருவாக்கும் நமது பிரதிநிதிகளையும் பாராட்டுவோம் அவர்களைத் தேர்ந்து எடுத்த நம்மையும் நாமே பாராட்டிக் கொள்வோம்.

மேலும் நாம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொள்வோம். செய்வதற்று அது ஒன்று மட்டுமே உள்ளது. இடுக்கண் வருங்கால் நகுக.

நகுக! நகுக! நகுக!

- அழகன் ரா திருப்பதி