×

→ ஆசிரியரிடமிருந்து‍

→ மிறைக் கவி →  கவிதை → புத்தகங்கள் நல்ல நண்பன் → தமிழா கேள்! → பழச்சாமி → நட்பு → கவிதைகள்

ஆசிரியரிடமிருந்து‍ …!


ஒருநாள் அக்பரும் பீர்பாலும் அரண்மனை தோட்டத்தில் நடை பழகிக் கொண்டு இருந்தார்கள். அக்பர் தோட்டத்தில் கத்தரிக்காய் செடி இருந்தது அதனைப் பார்த்தவுடன் அக்பர் பீர்பாலிடம் "காய்களிலே சுவையானது கத்தரிக்காய் தான்” என்று புகழ்ந்து உரைத்தார். உடன் நடைபழகும் பீர்பால், "ஆமாம் அரசே கத்தரிக்காய் தான் காய்களின் ராணி. அதனால் தான் இறைவனே கத்திரிக்காய்க்கு தலையில் மகுடம் வைத்துப் படைத்து இருக்கிறார்" என்று வெகு சிறப்பாகவே ஆமாம் சாமி போட்டார்.

மற்றோரு நாள், அக்பருக்கு உடம்பில் அரிப்பு எடுத்தது. அரண்மனை வைத்தியர் மன்னரைச் சோதித்தார். வைத்தியர், அரிப்புக்குக் காரணம் கத்தரிக்காய், எனவே கத்தரிக்காய் உண்பதை தவிர்க்கச் சொன்னார்.

அக்பரும் பீர்பாலும் அன்றும் தோட்டத்தில் நடை பழகச் சென்றார்கள். அங்குக் கத்திரிக்காய் செடியைப் பார்த்து அக்பர் "அகில உலகத்தில் மோசமான காய் என்றால் கத்தரிக்காய் தான்” என்றார். அதற்கு உடனே பீர்பால் "ஆமாம் அரசே அகில உலகத்திலேயே மிக மிக மோசமான காய் கத்திரிக்காய் தான்" என்று மேலும் வெகு சிறப்பாகவே ஆமாம் சாமி போட்டார்.

அக்பர் ஆச்சரியம் கலந்து "பீர்பால் என்ன பேசுகிறாய் அன்று நான் கத்தரிக்காய் தான் நல்ல காய் என்று சொன்னதுக்கு நீ "ஆமாம் அரசே கத்தரிக்காய் தான் காய்களின் ராணி. அதனால் தான் இறைவனே கத்திர்க்காய்க்கு தலையில் மகுடம் வைத்துப் படைத்து இருக்கிறார்" என்று கூறினாய். இன்றைக்கு நான், "அகில உலகத்தில் மோசமான காய் என்றால் கத்தரிக்காய் தான்” என்று சொல்கிறாய் என்று வினவ அதற்கு பீர்பால் கூறினார் "அரசே இந்த பீர்பால் உங்களுக்குத் தான் சேவகம் செய்கிறான் கத்திரிக்காய்க்கு இல்லை" என்று.

* * * *

நம் சமுதாயத்தின் ஒரு சிறு பெண் தன் சின்னச் சிறு வயதில் கனவு காண்கிறாள் ஒரு மருத்துவராக வேண்டும் என்று. அவளின் கனவு உண்மையாக அவளின் ஆசிரியர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் படி நன்றாகப் படி. மேல்நிலை இரண்டாம் வகுப்பில்(+2) நீ அதிகமாக மதிப்பெண்கள் பெற்றால் உன் கனவினை நீ உண்மையாக்கிவிடலாம் என்று கூறினர். அவளும் அது தான் உண்மை என்று நினைத்து படித்தாள், படித்தாள். சிறந்த மதிப்பெண்ணும் பெற்றாள்.

தன் கனவு உண்மையாக போகிறது. தான் ஒரு மருத்துவராக ஆகப் போகிறோம். அதற்குத் தேவையான மதிப்பெண்கள் பெற்றும் இருக்கிறோம். மருத்துவ துறைக்கு செல்ல போதுமான அடிப்படை அறிவினை கற்றும் இருக்கிறோம் என்று நினைத்தாள். என்றன் உழைப்பு என்னுடைய கனவினை உண்மையாக்கி விட்டது. முயற்சி திருவினைாயக்கும் என்பது உண்மை என்று உணர்வினைப் பெற்றாள்.

திடீர் என்று ஒரு நாள் ‘நீட்’ என்ற ஒரு தேர்வு எழுதிக் கைவரப் பட்டால் தான் நீ மருத்துவராக ஆக முடியும் என்று ஒரு செய்தி அவளை வந்து தாக்கியது. அவளும் சிந்திக்கிறாள் “பனிரெண்டாம் வகுப்பில் நீ அதிகமாக மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவராக முடியும் என்று அன்று சொன்னார்களே அது ஏன் பொய் ஆனது”. மருத்துவம் இனி தானே படிக்கப் போகிறோம். அதற்குத் தேவையான அடிப்படை அறிவியல் சிறப்பாகத் தான் பயின்று இருக்கிறோமே பின் ஏன் இந்த சோதனை என நினைத்து வாட்டமுற்றாள். சிறு வயதில் இருந்து தன் குறிக்கோளுக்காக உழைத்த உழைப்பு சிலர் தான்தோன்றித் தனமாக செய்த சட்டங்களினால் இல்லாமல் போய் விடுமோ! என வேதனை உற்றாள்.

தவறான சட்டங்களை சரியாக நெறிப்படுத்த நாம் தேர்ந்தேடுத்த நம் பிரதிநிதிகளை சந்தித்து முறையிடுகிறாள். அவர்களும் அவளிடமும் இந்தச் சமுதாயத்திடமும் பொய்யான நம்பிக்கையினை கொடுத்து விட்டு தங்களின் பதவிகளைத் தக்க வைக்கும் செயல்களில் ஈடுபடச் சென்று விட்டனர்.

மனம் நொந்து கடைசி முயற்சியாக நீதிமன்றத்திற்குச் சென்றாள். அவளுக்கு அங்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மக்களுக்காகச் சட்டங்கள் இல்லை என்பதை உணர்ந்த அவள் சென்றே விட்டாள் இந்த உலகத்தை விட்டே.

ஒரு சிறு பெண்ணின் கனவினை கலைத்த நாம் எவ்வளவு பெரிய குற்றம் செய்து உள்ளோம். மக்களே எண்ணிப் பாருங்கள். மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர சட்டங்களுக்காக மக்கள் இருக்க முடியாது. அது போல மக்களுக்காகத் தான் நாடே தவிர நாட்டுக்காக மக்கள் இருக்க முடியாது.

நாம் நம்முடைய பொறுப்பினை சரி வர நிறைவேற்றாமல் ஒரு சிறு குழந்தையை கொலையும் செய்து விட்டோம். இனியாவது திருந்துவோம். நம்மைப் பிரிதிநிதப் படுத்தாத நம்மின் பிரிதிநிகளைத் திரும்ப அழைப்போம். நமக்கான பிரிதிநிதிகளையே நாம் தேர்ந்து எடுப்போம். அவற்றில் இருந்து விலகுவோரை நாம் திரும்ப அழைப்போம். அவர்கள் சட்டசபைக்கோ மக்களவைக்கோ சென்று எதுவும் ஆகப் போவதில்லை.

* * * *

சிறப்பான மருத்துவரை உருவாக்க இனிமேல் நாம் நாட்டின் அளவில் தேர்வு நடத்த வேண்டாம். சர்வதேச அளவில் அது கூட குறை தான், இந்தப் பால் விதி முழுமைக்கும் தேர்வு நடத்தி சிறந்த மருத்துவரை உருவாக்குவோம்!!!!!!!!!!!

- அழகன் ரா திருப்பதி